நாடு நலம்பெற…

 நோயிக்கு நோய் வந்து

          சாதல் வேண்டும்

நோயில்லை என்ற பேச்சே

          நிலைபெற வேண்டும்.

 

நாவுக்குச் சுவை சேர்க்கும்

          இனிப்புகள் எல்லாம்

ஆறாகத் தெரு வீதியில்

          ஓடிடல் வேண்டும்.

 

விளையாத இடமெல்லாம்

          விளைந்திடல் வேண்டும்

உலகத்தில் உழவுத் தொழில்

          நமதாக வேண்டும்.

 

அலையாத கலைகள் எல்லாம்

          பெருகிடல் வேண்டும்

நிலையான புகழென்று

          காட்டிடல் வேண்டும்

 

கடலினையே நிலமென்று

          நினைத்திடல் வேண்டும்

படகினிலே தினமோரூர்

          பார்த்திடல் வேண்டும்

 

அங்காடி கடைகளெல்லாம்

          மூடுதல் வேண்டும்

தேவையென்ற பேச்சுக்கே

          சிறைபோடல் வேண்டும்

 

தன்னதிது என்றுசொலல்

          அழிந்திடல் வேண்டும்

தன்னிகரில்லா சமுதாயம்

          என்றாக வேண்டும்.

 

ஆசைக்குத் தூபமிட்டு

          வழியனுப்ப வேண்டும்

காலத்தைக் கண்ணெனவே

          காத்திடல் வேண்டும்.

 

நடத்துனரில்லா பேருந்துகள்

          பெருக வேண்டும்

நடைபாதை இடமெல்லாம்

          சோலையாக வேண்டும்

 

காலையிளம் வேளையிலே

          கோழி கூவல் வேண்டாம்

கோழி கூவும் முன்னாலே

          சங்கூத வேண்டும்

 

வான் நிலவே நமைப்பார்த்து

          மயங்குதல் வேண்டும்

அந்நிலவே பூமிதனில்

          நடந்தாக வேண்டும்

 

சூரியனே நமைப்பார்த்து

          வியக்க வேண்டும்

நிலமக்கள் எல்லோரும்

          அவனாக வேண்டும்

 

தஞ்சாவூர் பொம்மைகளெல்லாம்

          முண்டமாக வேண்டும்

முட்டாளென்ற பேச்சுக்கே

          குழிவெட்ட வேண்டும்.

 

வீம்பான பேச்செல்லாம்

          வாழ்விழக்க வேண்டும்

வீரவுணர்ச்சி காவியம்பல

          இயற்றிடல் வேண்டும்

 

ஒவ்வொருவனும்

          காவியமாக்க வேண்டும்

காவியத்தில் அவனே

          தலைவனாக வேண்டும்.

 

வரிசையென்ற சொல்லே

          வழக்கிழக்க வேண்டும்

காலத்திற்கே பரிசமாக

          அளித்திடல் வேண்டும்

 

நில மகளோ வான் நிலத்தில்

          நடனமாட வேண்டும்

வான்மேகம் மழைதனையே

          பரிசளிக்க வேண்டும்

 

அணையப் போகும் விளக்கிலே

          எண்ணெய் கொஞ்சம் ஊற்றி

அலைந்து திரியும் சமுதாயத்தை

          நிலைக்களனாய் மாற்றுவோம்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்