திருப்பூர் குமரன்

             முந்நூறு நாளில் கருசிறை முடங்கி

          விடுதலை யானவர் ஒருவர் – அவர்

          நிலைபெறும் கோடி மக்களில் சிறந்து

          தலைதந்து காத்த புனிதர்.

 

          மழலைப் பருவத்தில் ஏழைத் தாயின்

          மடியில் வளர்ந்தவர் அவரே – வளர்ந்து

          இருமூன்று வயதில் ஆரம்பப் பள்ளியில்

          அறிவைப் பெற்றவர் அவரே.

 

          இருபது வயதில் பல்லாண்டு வாழ

          வழியைக் கண்டவர் அவரே – உள்ள

          பல்மொழி இனத்தை ஓரினம் ஆக்க

          நலம்படச் செய்ததும் அவரே.

 

          அன்பும் பண்பும் அமைதியும் நிறைந்த

          ஆண்மை உள்ளவர் அவரே – பிறந்த

          தாய்நாட்டின் மானத்தைத் தரணிபோற்றிட

          உயர்த்திடக் கொடுத்ததும் தலையே.

 

          உயிரைக் கொடுத்தும் கொடியைக் காத்து

          வெள்ளையன் சிந்திக்க வைத்தே – அவர்

          பாரில் பாரத நாட்டின் பெருமையை

          ஓங்க வைத்துமே உயர்ந்தார்.

 

          தணிகை மலையில் திகழ்ந்திடும் குமரன்

          தமிழரின் கடவுள் என்போம் – அவ்விறை

          பெயர்பெற்ற திருப்பூர் குமரனும்

          திருவருள் பெற்றவர் என்போம்.

 

          விடுதலை அடைந்த பாரத நாட்டை

          வழிநடத்திச் செல்வோர் வகிக்கும் கொள்கை

          கொடிபிடித்து நாமும் நாட்டின் சுதந்திரம்

          பேணிக் காப்போம் வாரீர்.

Comments

Popular posts from this blog

கடமை 2

என்னில் வாழ் குமர குருபரா