பிறந்தநாள் வாழ்த்து
பண்பிலும் பணத்திலும் குறைவிலா தங்கம்
எங்கு மென்றும் வாழ்ந்து இருக்கும்
பண்ணிலும் பொருளிலும்
குறைவிலா தமிழும்
பன்னா ளிங்கு பரவி இருக்கும்
கண்ணினும் பெரிதும்
இமையது போல
உன்னதம் மிக்க தமிழ்மொழிக் காக
தொண்ணூ றாண்டு
தொண்மை போற்றித்
தென்தமிழ் நாட்டில் வாழ்ந்திடல் வேண்டும்.
(வேறு)
விண்ணில் தோன்றும்
நிலவு
வீணாய் ஒளியை உமிழ்ந்ததில்லை
மண்ணில் தோன்றும்
எல்லாம்
மனிதராய் வாழ்ந்த நினைவில்லை
கண்ணில் தோன்றும்
காட்சியெல்லாம்
கருத்தில் வந்து அமர்வதில்லை
உண்மையாய் வாழ்ந்த
மனிதரிடையே
ஒருத்தியாய் நின்று வாழ்ந்திடு.
கடமையைக் கண்ணாய்ப்
போற்றி
காலம் போற்ற வாழூஉ
மடமையைச் சொல்லால்
வென்று
மாறிய சமூகம் காட்டு
உரிமை என்றும்
இழக்காது
தெளிவைக் கொண்டு வாழூஉ
கரிய நெஞ்சத்
துள்ளே
ஒளியாய் நின்று காட்டு.
பெற்றோர் இரண்டு
கண்ணெனவும்
உற்றார் அவற்றின் துணையெனவும்
கற்றோர் சிறந்த
உலகினிலே
நற்றாழம் பூவாய் விளங்கிடு.
முதியோர் போற்றும்
இளையவளாய்
விதியை மாற்றி வாழ்ந்திடு
புதியோர் நாட்டில்
தோன்றிடவே
புதுப்பாதை யொன்றைக் காட்டிடு.
உன்னினும் மிக்கோர்
கல்வியில்
இல்லையெனக் கவினுருகக் காட்டு
தன்னினும் இனியவள்
நாட்டில்
பிறக்க வில்லையெனக் காட்டு
என்றும் இளையவளாய்,
எங்கள்
நெஞ்சில் மங்கா திருக்கும்
அன்புச் சோதரியே
உன்னை
வாழ்த்துகின்றேன் பிறந்த நாளிலே.
Comments
Post a Comment