காலைக் கதிரோன்

 நாளைக் காலை விடியும் போது

          காலைக் கதிரோன் தேரில் வருவான்

மூளை கொஞ்சம் தூங்கும் போது

          மேலே விழுந்து எழுப்பி விடுவான்

தாளைக் கொஞ்சம் புரட்டச் சொல்லி

          தாயின் மூலம் தூது விடுவான்

தேளைக் கொஞ்சம் வெளியே விட்டு

          தாமும் கூட சேர்ந்து வருவான்.

 

ஏரும் மாடும் உழவன் பின்னே

          பீடு கொண்டு தொடர்ந்து செல்லும்

காரும் பனியும் அதனைத் தொடர்ந்து

          வீடு பேற்றை நடத்திச் செல்லும்

போரும் முரசும் வயலின் பக்கம்

          கீத ஓசை எழுப்பும் போது

சாரும் கதிரோன் ஒளியும் பட்டு

          சாய்ந்த கதிரைப் பொன்னாய் ஆக்கும்.

 

சோலைப் பூவில் தேனை உண்ணும்

          வண்டுக் கூட்டம் எல்லாம் எழுந்து

பாலைக் காய்ச்சிக் காப்பி போட்டு

          பருகிய பின்னே தெருவில் வந்து

ஓலை பார்த்துக் கோலம் போட்டு

          சாலை யெல்லாம் அழகு செய்து

சேலை காற்றில் அசைந்து ஆட

          காலைக் கதிரோன் வரவை நோக்கும்.

 

புள்ளி வைத்துக் கோடு போட்டு

          போட்ட கோலம் அழியும் முன்னே

கள்ளிப் பூவாய் வானில் தோன்றி

          காலே யில்லா தேரில் வந்து

பள்ளி கொண்ட தெருவில் எல்லாம்

          போட்ட கோலம் மின்ன மின்ன

நள்ளி சேலை வேண்டும் என்று

          காற்றில் சேலை கழட்டச் செய்வான்.

Comments

Popular posts from this blog

கடமை 2

திருப்பூர் குமரன்

என்னில் வாழ் குமர குருபரா