அன்றும் இன்றும்

 படபட எனப்பல ஓசைகள் நெஞ்சில்

          தடதட வென்று ஓடுவது கண்டு

மடமட எனப்பல ஆசைகள் தோன்றி

          நடநட வென்று நடந்தன கால்கள்

சுடசுட வன்று சுட்ட கண்கள்

          படபட வென்று அலைந்தது கண்டு

கடகட வென்று அலைந்த மனதில்

          விதவித எண்ணம் தோன்றின தன்று.

 

தொடதொட கைகள் சிலிர்த்தது கண்டு

          சிலசில எண்ணம் உதிர்ந்தன அங்கு

விடவிட கண்ணீர் வற்றியது போல

          கதகத வென்று  அழுதன  கண்கள்

விடுவிடு வென்று அன்பு மழையில்

          பலப்பல முத்தம் பொழிவதைக் கண்டு

குடுகுடு வென்று வந்த நிலவும்

          விடுவிடு வென்று ஓடிய தன்று.

 

சலசல வென்னும் கிளைகள் அசைவில்

          உளஉள வென்று வந்தன தென்றல்

கலகல வென்னும் பேச்சுக் கிடையே

          பளபள வென்று மின்னிய தன்று.

சிலசில நேரம் தென்றல் வந்து

          குசுகுசு வென்ற பேச்சைத் தடுக்கும்

பொலபொல வென்று உதிர்ந்த கண்ணிர்

          கனகன வென்று  நெருப்பாய் மாறும்.

 

அலையலை யென்றே அலைந்த மனங்கள்

          அலைகட லோரம் சேர்ந்தன அன்று

கலைகலை யென்றே பிதற்றிய மனங்கள்

          கலையென வாழ்வை அமைத்த தன்று

மலைமலை எண்ணம் மனதில் வைத்து

          மலைமேல் முகத்தைச் சாய்த்த அன்று

இலையிலை என்றும் பிரியேன் என்று

          இணையிலா இன்பம் அடைந்த தன்று.

 

சிலைசிலை யென்றே சிற்சில நேரம்

         சிலையென அமர்வோம் சிறுபட கோரம்

உலையுலை என்றே கொதித்த மனங்கள்

         உலையுள் அன்பை ஊற்றிய பின்னும்

கிளைகிளை தாவும் குரங்கினைப் போல

          கிளையென என்னை நினைத்தா லன்று

தலைதலை யசைத்துக் கழுத்தின் இடையே

         தலையெனத் தாலி கேட்டாள் அன்று.

 

ஓலையோலை எழுதி ஓய்வற்ற மனதில்

          ஓடையென வந்தாள் கண்மணி அன்று

காலைகாலை விழித்து கவலைதனை யொழித்து

          காளையென நடந்தேன் கதிரவன் முன்னே

பாலைபாலை என்றே பாடிய மனதில்

          பாலையிலை என்று பாலை வார்த்தாள்

சோலைசோலை யென்று அலைந்த போது

          சோலையென நின்றாள் என்னுயிர் அன்று.

 

சாலைசாலை யென்றே நடந்தன கால்கள்

         சாலைகூறும் கதையோ எங்கள் கதையே

வேலைவேலை யென்றே அலைந்த மனதில்

          வேலையிலா பொழுதின் அயர்வினைப் போல

நாளைநாளை யென்றே கடத்திய பொழுது

          நாளையிலை என்று கூறியே சென்றாள்

வாலைவாலை யாட்டி வந்த போது

          வாலையிலை யென்றே அறுத்தாள் அன்று.

 

மாலைமாலை கண்டு மாண்புரு நெஞ்சோ

          மாலையெனப் பொழியும் அன்பு மழையில்

கொலைகொலை யென்றே சாற்றிய போதும்

          கொலையிலா வாழ்வை அமைத்தன அன்று

நூலைநூலைக் காட்டி நுழைவாயில் அமைத்து

          நூலிலா கொடியை ஏற்றினேன் அன்று

நிலைநிலை யில்லா மனதினில் நித்தம்

          நிலையிலா வாழ்வைக் காட்டிய தின்று.

 

தடைதடை யென்றே விதித்த போதும்

          தடையிலை போன்ற அகன்ற மனதில்

படைபடை யென்றே கேடுகள் வரினும்

          படையிலா தனியாய் வெல்வேன் அதனை

விடைவிடை கூறி ஆற்றிய மனமும்

          விடையினில் ஏறி பறந்தன இன்று

நடைநடை யென்றே நடந்த பொழுதை

          நடையிலா பொழுது நினைப்ப தின்று.

 

அடையடை யான அழுக்கு மொழிகள்

          அடையாள மின்றி மறைந்தன இன்று

இடையிடை யென்றே இடித்தன கைகள்

          இடையிலை என்றே மறைத்தன இன்று

உடையுடை யென்றே உதிர்த்தன மொழிகள்

          உடையிலை யென்றே பறித்தன இன்று

சடைசடை காட்டி தகர்த்த பொழுது

          சடையிலா தலையாய் ஆனேன் இன்று.

 

குடைகுடை யென்றே குடைந்த மனதில்

          குடையிலை என்றே பறித்தன இன்று

எடையெடை என்றே காதலித்த மனது

          எடையில தென்று எரித்த தின்று

கடைகடை பார்வையில் கவர்ந்தன கண்கள்

          கடையிலை என்றதும் கழன்றன இன்று

மடைமடை யாசை மனதினில் தேக்கி

          மடையிலா பொழுது ஓடின இன்று.

 

கொடைகொடை யென்றே கொடுத்த போதும்

          கொடையென அன்பை ஏற்காள் இன்று

வடைவடை யாசை வந்த போதும்

          வடையதை தடுத்து மாய்ந்தேன் இன்று

தொடைதொடை தட்டிப் பேசிய போதும்

          தொடையினில் கத்திப் பாய்ச்சினாள் இன்று

முடைமுடை சொற்கள் முருக்கிகய போதும்

          முடையிலா என்னை முறித்தாள் இன்று.

 

பீடைபீடை யென்றே பேசா நெஞ்சு

          பீடையென என்றே ஒதுக்கிய தின்று

மேடைமேடை யேறிச் சாற்றிய போதும்

          மேடையிலை என்றே மாய்த்தாள் இன்று

வாடைவாடை காற்றை நாடிய போது

          வாடையிலை என்றே விடையினைத் தந்தாள்

சாடைசாடை மொழிகள் ஊர்ந்தன அன்று

          சாடையில தன்று சோடையென் றாளின்று.

 

மறைவினில் இருந்து பார்க்கும் போது

          விரைவினில் என்னை அடைவாய் என்று

இறையினில் பாரம் இறக்கி விட்டு

          கரையினில் நிற்பேன் நித்தமுனைக் காண

சிறையினில் உன்னை வைத்த போதும்

          நிரையினில் கடிதம் வரைந்தாய் என்றால்

முறையினில் உன்னைக் கவர்ந்து கொள்ள

          உரையினை யாற்ற முயல்வேன் இன்று.

 

ஓடையோடை யாசை ஓடிய தன்று

          ஓடையிலா இங்குத் தவிப்ப தின்று

பெடைபெடை யென்று நினைத்த மனதில்

          பெடையிலை என்று உணர்த்திய தின்று

கிடைகிடை என்றே இருக்கும் போது

          கிடையிலை என்றே விட்டாள் இன்று

பாடைபாடை என்றே போகும் போது

          பாடையினைக் கொஞ்சம் பார்ப்பாள் இன்று.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்