சுகவரிகள்…?

 


        கார்காலமே – அது – உனக்காகத்தான்

        கலங்காதேடி – என் – கண்மணி.

         

          பூவண்டு தூங்குவதும் – உன்

          கூந்தல் மலரிலேதான்

          தேன்வந்து சேர்ந்ததும் – உன்

          தேவழகில் மயங்கிடத்தான்.

 

          அத்தைக்கு மகளே – என்

          சொத்துக்கு நீதாண்டி

          நந்தைக்குப் பிறந்தவளே - நீ

          நித்தமழுது சாவாதேடி.

 

          மல்லிகைப்பூ வாசனைக்கு – நீ

          மன்மதனை நினைத்திருந்தாய்

          எங்கோ சுற்றிய கொடிமல்லி – இன்று

          உன் காலைச் சுற்றுதடி.

 

          தாளிப்பு வாசனைக்கே – பலர்

          தாலிகட்ட காத்திருக்க

          அருகம்புல் முடிகாரன் – ஒருநாள்

          சமையல் சுவைத்தானேடி.

         

          அழகுக்கு நகையணிந்தாய் – இந்த

          இதழுக்கு வேண்டாமென்றேன்.

          வழக்குக்கு நீயென்று – நித்தம்

          உலகுக்கு சொல்லுகின்றேன்.

 

          நாளுக்கொரு தாள்கிழித்து

          அவனைநீ பார்க்கின்றாய்

          நாளுக்கொரு வாரம்தள்ளி – இவன்

          வந்திடவே துடித்திருப்பான்.

 

          சோலைக்குள் தனியாய்நீ

          உலாவும் போது

          சோதாக்கள் பலருன்னை

          சிவனுடையவள் என்கின்றார்.

 

          பதிவிரதை உன்னழகில்

          பாரதத்தைக் கண்டவன்

          பாதைமாறி போவானென்று

          நினைப்பதும் தவறன்றோ.

 

          விதிமுறையால் பிரிந்திருந்தால் – நீ

          சதியென்று நினைப்பாயோ

          வழியின்றிப் போனவனுக்கு

          வழிமூட மறந்தாயே.

 

          தடியூன்றி நடந்தேனும்

          தொடர்ந்துன்னை வந்தடைவேன்

          படியேறி வரும்முன்னே – நீ

          முடிமுந்திரி ஆவாய்பார்.

 

          வருமொழியில் இவன்பெயரை

          வரவேற்பு செய்தவள்நீ

          நிலையாக அப்பெயரை

          காத்திடுவேன் மறவாதே.

 

          சிறுமொழியும் இவன்மீது

          சிறுமையுடன் பேசாதே

          வறுமையிலும் உன்நினைவால்

          வாழ்பவன் இவனன்றோ.

 

          பெருமையாய் வாழ்வதற்கு – நீ

          பொறுமையாய் இருந்துவிடு

          கருமையாய் இருந்தாலும் – இவன்

          கண்ணுக்கு நீதாண்டி.

 

          எறும்புப் புற்றாக

          அரும்பும் ஆசைகளை

          குறும்புப் பேச்சாலே – இவன்

          குறிப்பிடும் மாதவனடி.

 

          உயிர்பாதி உன்னிடத்தில்

          நிலையாக விட்டுவிட்டு

          தயிர்போல உன்எண்ணம்

          தலும்பிட செய்துவிட்டேன்.

 

          புதிர்போல நீவாட

          விடைசொல்ல வருவேண்டி

          பதரான உன்னெண்ணம்

          பக்குவமாய் வையேண்டி.

 

          நிச்சயம் உன்னையிவன்

          நிச்சயம் செய்வாண்டி

          பக்குவமாய் சமைத்துப்போட

          பாக்குவெத்தலை மாத்துவாண்டி.

 

          என்மூக்கின் வாசமே – உன்

          இதயத் துடிப்பன்றோ

          என் நாக்கின் ஈரமோ – உன்

          இன்பப் பேச்சன்றோ.

 

          முகவரி இருந்தது

          சுகவரிகளை எழுதினேன்…

          முகவரியை இழந்ததால்

          சுகவரிகள்…?

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்