எத்தொழிலென்ன

 

வேலை வெட்டி இல்லாமல்

          ஊர் சுற்றித் திரிந்தவனை

மாலை போட்டு கணவனென்று

          மகிழ்வுடனே ஏற்றவள் நீ.

 

இன்பமதை எனக்களித்து

          இயங்குகின்றாய் வாழ்க்கையிலே

துன்பமதை உனக்களித்து

          துவளுகின்றேன் வறுமையிலே.

 

நெஞ்சமதை நினைத்துவிட்டால்

          நீர்க்கோலம் கண்ணமதில்

கொஞ்சமதை மறந்துவிட்டால்

          குறுகுறுக்கும் எண்ணமதில்.

 

நான்தவறு செய்துவிட்டேன்

          நல்லபடி படித்துவிட்டேன்

ஏன் வாங்கினேன் பட்டம்

          என்று தினமொரு வாட்டம்.

 

பள்ளி சென்று படித்ததினால்

          பழந்தொழில்  மறந்துவிட்டேன்

நல்லபல தொழிலிருந்தும்

          நான்செய்ய மறுத்துவிட்டேன்.

 

சோம்பேறித் தனம்கூட

          சோம்பலின்றிக் கூடவர

தேம்பி யழுவதற்கும்

          திறனின்றிப் போய்விட்டேன்.

 

பகட்டாக வாழ்ந்திடவே

          பகலிரவாய்க் கனவு கண்டேன்

திகட்டாத தெள்ளமுதே

          திருந்துகின்றேன் இன்று முதல்.

 

முத்தழகே உன் வாட்டம்

          முடித்திடவே முடிவெடுத்தேன்

எத்தொழில் செய்தாலென்ன?

          ஏற்பதுதான் இகழ்ச்சியன்றோ?

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்